Wednesday, June 16, 2010

பூவே உனக்காக!

உன்னைச் சுற்றியிருக்கும்
நான்கு சுவர்கள்!
உன் உலகம் இன்றுமுதல்!

உன் தலைக்கு மேல்
குவிந்திருக்கும் கூரை
உன் வானம் இன்று முதல்!

இந்தப் பாயும் தலையணையும்
இணைபிரியாத் தோழிகள்!

இந்த அலங்காரசாதனங்கள்
அவ்வப்போது
உன் முகத்திற்கு விருந்தாளிகள்!

இந்த ஊசி; இந்த நூல்
இந்த அடுப்பு: இந்தப் புகை
இந்த மதியம்; இந்தச் சிறை
இந்த நார்; இந்த மலர்
இவை உன் வாழ்க்கையின்
இன்றியமையாத அத்தியாயங்கள்!

இந்த ஜன்னல்
நீ சுவாசிக்கிற காற்றுத் தரும்

இந்தக் கதவு
நீ பார்க்கிற வெளிச்சம் தரும்

இந்தப் படிக்கட்டு
உன் அகழி!

உன் நுரையீரல் உனக்கு சொந்தம்
உன் சுவாசம் இல்லை!

போ!

புறக்கொல்லையில்
பூக்கத்துடித்துக்கொண்டிருக்கும்
பூவிடம் போய்ப் புலம்பு!

உன் சுதந்திரம்
நீ மாலையாவதிலோ
அல்லது
நீ மாண்டு போவதிலோ இருக்கிறது?

சொல் பெண்ணே!
எப்படி சாக விருப்பம் உனக்கு?